Wednesday 9 October 2013

நடிகர் எஸ்.வி.சேகர் பா.ஜனதாவில் இணைந்தார்

திரைப்படம் மற்றும் நாடக நடிகரான எஸ்.வி.சேகர், பா.ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் முன்னிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று மாலை சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அவருக்கு, கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பின்னர், பா.ஜனதா கட்சியில் இணைந்தது குறித்து, நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

நான் 1991-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பா.ஜனதா கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டேன். ஆனால், கட்சியில் உறுப்பினராகவில்லை. கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது, 2004-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எம்.எல்.ஏ.வாக நான் பணியாற்றிய சமயத்தில், என் மீது எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. ஆனாலும், 2009-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். 

அதன்பிறகு, 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இ-மெயில் மூலம் ராகுல்காந்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை நேரில் சந்தித்தேன். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை 3 மாதத்தில் நீக்கிவிட்டனர். பின்னர், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை 5, 6 முறை நேரில் சென்று சந்தித்தேன். ஒவ்வொரு முறை குஜராத் சென்றபோது, அந்த மாநிலத்தின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்பு அடைந்தேன். அங்குள்ள முஸ்லிம் மக்கள் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ராமருக்கு அணில் உதவியது போல், பா.ஜனதாவுக்கு நானும் உதவியாக இருப்பேன். 

நான் பா.ஜனதாவில் சேர்ந்தவுடனேயே, எம்.பி. பதவி எதையும் கேட்டு நான் வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவேன். 

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, எஸ்.வி.சேகரிடம் நிருபர்கள், "நீங்கள் ஒவ்வொரு கட்சியாக மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். மக்கள் உங்களை தவறாக எண்ண மாட்டார்களா?" என்று கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர், "எந்த கட்சியில் இருந்தபோதும் நானே விலகவில்லை. அவர்கள் தான் என்னை நீக்கிவிட்டார்கள். ஒரு கட்சி தலைமையை நம்பியே நான் சேர்கிறேன். ஆனால், அந்த கட்சியில் சேர்ந்த பிறகுதான், 2-வது தலைமை, 3-வது தலைமை இருப்பதெல்லாம் தெரிகிறது" என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

linkwithin

ilamthamarai